
- This event has passed.
மானுடம் வென்ற கதைகள் – எழுத்தாளர் பிரபஞ்சன்

வணக்கம்!
மானுடம் வென்ற கதைகள் – எழுத்தாளர் பிரபஞ்சன்
“மனிதன் சக மனிதன்பால் அன்பு செலுத்த வேண்டும். எனில் மனிதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி எனில் அவன் தன்னைத் தானே புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்ஙனம் மனிதன் தன்னை அறிவதற்கு கலையும் இலக்கியமும் மிகப் பெரும் துணையாய், ஒரு நல்ல சினேகிதனாய் நிற்கும் என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்”- பிரபஞ்சன்
தான் வாழ்ந்த காலம் வரை தன் எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களிடையே உரையாடிக் கிடந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன். எழுத்தால் என்ன செய்துவிடமுடியும்; எழுத்து எதைக் கொடுக்கும் என்பதைப் பற்றிய சலனங்களின்றி வாழ்நாள் முழுக்க எழுத்தாளராகவே வாழ்ந்தவர் பிரபஞ்சன். மனிதரின் மனதுக்குள் பொதிந்திருக்கும் உணர்வுகளை, ரகசியங்களை தன் பாத்திரங்களின் வழியே உரையாடியவர். நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் அவர் படைத்த பாத்திரங்கள் பலருக்கும் நெருக்கமானவை. அவரின் கதைகளில் பெரும்பாலும் குரலற்றவர்களின் பாத்திரங்கள் நிறைந்து நிற்கும். அவர்களின் காதல், ப்ரியம், ரகசியம், துயரம், நுண்ணுணர்வுகள் இவற்றைச் சார்ந்தே அவரது புனைவுலகம் நிறைந்திருக்கும். `ஒரு மனுஷி’ , `மரி என்கிற ஆட்டுக்குட்டி’, `அப்பாவின் வேஷ்டி’ என இவரின் பல சிறுகதைகள் அதற்கு சாட்சியமாக உள்ளன. பிரபஞ்சனுக்கு சங்க இலக்கியங்கள் மீதான ஈர்ப்பு எப்போதும் உண்டு. இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தமிழின் சங்க இலக்கியம் சார்ந்து ஓர் ஆய்வு செய்யவிரும்புவதாகத் தெரிவித்திருந்தார். ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’, ‘இன்பக் கேணி’, ‘நேசம் மறப்பதில்லை’ என மொத்தம் நான்கு வரலாற்று நாவல்களையும் எழுதியுள்ளார். மகாநதி, நீலநதி, திரை, ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், சித்தன் போக்கு, காகித மனிதர்கள், சந்தியா, ஒரு மனிஷி, மரி என்கிற ஆட்டுக்குட்டி போன்ற அவரது நாவல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பிரபஞ்சனின் படைப்புகள் இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலும், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், சுவீடிஷ் போன்ற பன்னாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
எழுத்துலகில் தன் கனிவான சொற்களால் அன்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவுதினத்தை ஒட்டி டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இலக்கியக்கூட்டத்தில் அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், எழுத்தாளர்கள் அவரைப் பற்றிய நினைவுகளையும், அவருடைய எழுத்துகளைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.
அன்பு என்ற ஒற்றைச் சொல்தான் அவர் வாழ்க்கை. பிறருக்கு நம்பிக்கை தரும் எழுத்துகளை எப்போதும் கொடுத்தது மட்டுமல்லாமல் அதைத் தன் வாழ்க்கையிலும் சுமந்து சென்றவர் பிரபஞ்சன் என அவருடனான தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் தமயந்தி, கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். பெண்களின் அக உலகு குறித்து அக்கறையுடன் பதிவு செய்து வருபவர். தமயந்தி அவர்களின் நிழல் இரவு குறிப்பிடத்தக்க நாவல். என் பாதங்களில் படரும் கடல் என்ற கவிதைத் தொகுப்பையும், இந்த நதி நனைவதில்லை, வல்லமை தாராயோ போன்ற கட்டுரைத்தொகுதிகளையும், பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தமயந்தி இயக்கிய ஆவணப்படங்கள் குறிப்பிடத்தகுந்தவை. தற்போது அவர் இயக்கி வெளிவந்துள்ள படம் காயல்.
பிரபஞ்சனோடு மிக நெருங்கிப் பழகியவர்களுக்குதான் தெரியும், அவர் எவ்வளவு உன்னதமான மனிதர் என்று. அவருடைய எழுத்துக்கும் குணத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. அவரின் கதைகளை ஆழ்ந்து படிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும், அவர் கதைகளில் கெட்டவர்களே கிடையாது என்று என்று பிரபஞ்சனுடனான தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் பாஸ்கர் சக்தி, எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர். பாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா என்ற தொகுப்பாக வெளிவந்தது. காற்று வளையம், பூவரசம் வீடு போன்ற நாவல்களும் கடலோரக் கிளிஞ்சல்கள் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 2024 ல் இவர் இயக்கி வெளி வந்த படம், ரயில்.
பிரபஞ்சன் அவர்களின் இறுதி நாட்களில் உடனிருந்தவர் பி.என்.எஸ். பாண்டியன். இவர் பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், மற்றும் சமூக ஆர்வலர். எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் நெருங்கிய நண்பரான பாண்டியன், பிரபஞ்சன் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்படுகிறார், இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. ‘ஊரடங்கு உத்தரவு: புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு’ இவரின் குறிப்பிடத்தக்க கட்டுரைத் தொகுப்பு. புதுச்சேரியின்
தற்கால அரசியல் வரலாற்றை ஆய்வு செய்து வருகிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் கதைகள் மற்றும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இம்மாத இலக்கியக்கூட்டத்தில் இணைந்திருங்கள்.
நாள்: டிசம்பர் 20, சனிக்கிழமை
அமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி
இந்திய நேரம்: இரவு 9.30 மணி
Zoom: https://fetna.org/ilakkiyam-online
YT Live: http://fetna.org/ytlive
FB Live: http://fetna.org/fblive
நன்றி.
