ஒருங்கிணைப்பாளரின் நன்றி மடல்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 35 வது ஆண்டு விழா இனிதே நடந்து முடிந்தது. அந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக என்னைப் பணித்தமைக்கு பேரவைக்கு நன்றிகள் பல.

கரோனா பெருந்தொற்றின் அச்சம் இன்னும் முழுதாக விலகாத நிலையில், இரண்டு ஆண்டுகள் நேரடியாக சந்தித்திராத  பல குடும்பங்கள் , இவ்விழாவில் கலந்துகொண்டு, சற்றேறக்குறைய இரண்டாயிரம் பேர் கூடிய ஓர் பெருவிழா, நானூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால், அவர்தம் தன்னலமற்ற உழைப்பால் நிகழ்ந்தது. என்னை நேரில் சந்தித்து பலர் எனக்குப் பாராட்டுகள் தெரிவித்தாலும், அந்த பாராட்டுதல்கள் எல்லாம் போற்றுதலுக்குறிய தன்னார்வலர்களையே சேரும். இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் எனது  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை முழுமையாக பயன்படுத்தினோம், சுவைமிக்க சிறப்பான உணவு, அதைவிட சிறப்பாக உணவு பரிமாறிய நமது தன்னார்வத் தொண்டர்கள், மேலும் பற்பல தன்னார்வலர்களைக் கொண்ட 40 க்கும் மேற்பட்ட குழுக்கள், இளையோர் அதிகம் பங்குபெற்ற சிறப்பான இணையமர்வுகள், பற்பல போட்டிகளும் அதில் பங்குபெற்ற உற்சாகமிக்க இளையோரும்,  இலக்கிய வினாடி வினா உள்ளிட்ட அருமையான பல மேடை நிகழ்வுகள், பறையும் கும்மியும் கலந்த தனித்துவம் மிக்க சங்கங்களின் சங்கமம், தமிழக முதல்வரின் காணொளி, அதிலும் சிறப்பாக தொற்றுக் காலத்தில் நமது பேரவையின் உதவிகளை மறவாமல் நன்றி சொல்லிய பாங்கு, அரசியல் பேசாமல், அயலாக தமிழர்களின் நலன் கருதி ஆற்றிய உரை – நமது பேரவையின் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியது.

வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கிய தொழில்முனைவோர் மாநாடு முதல், திங்கள் அன்று நிறைவடைந்த இலக்கியக் கூட்டம் வரை, மூன்றரை நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இவ்விழாவில், நிறைகள் பல இருந்தாலும், சில நல்ல படிப்பினைகளும் இருக்கின்றன.  (1) தொற்றுக் காலத்தின் தன்மை மாறியதால், திடீரென்று சில விடுதிகள் , அடுத்தடுத்த அறைகளை வழங்குவதில் கட்டுப்பாடு விதித்து, பல அறைகளை த் தர மறுத்ததால், விடுதி அறைகள் தருவதில் ஏற்பட்ட சிக்கல்கள், (2) இணையமர்வுகளுக்கான அறைகளில் சிலவற்றை திடீரென்று மறுத்த கல்லூரி அலுவலர்கள், அதனால் இணையமர்வுகளை  இடம் மாற்றுவதில் மேற்கொண்ட சிக்கல்கள், (3) தொற்றுக் காலத்தின் தன்மையால், விருந்தினர் வருகையில் உறுதியின்மையால்  நிகழ்ச்சிகளை பலமுறை மாற்றியமைக்கவேண்டிய சூழல்,(4) தொற்றுக் கால தடைகளின் பகுதியாக அரங்க மேலாளர்களின் அறிவுறுத்தலால் இடம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல், – இவ்வாறாக குறைகளுக்கான விளக்கங்கள் இருந்தாலும், அவற்றுக்காக எனது மனமார்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞாயிறன்று நிகழ்ந்த இசைநிகழ்வில் பாடகர் அறிவு அவர்கள் சில பாடல்களைப் பாடியவுடன் விழா நிறைவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால், மறுநாள்  இலக்கிய கூட்ட நிகழ்வின் இறுதியில், பாடகர்  அறிவு அவர்கள் , மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து சிறப்பு விருந்தினர் மற்றும் மக்கள் முன் பாடி சமன் செய்து பாராட்டப்பட்டார்.

நான் ஞாயிறன்று வணிகப் பெருமக்களை அவர்தம் அங்காடிகளில் நேரில் சந்தித்து உரையாடினேன். அனைத்து வணிக வள்ளல்களும், மக்கள் பலரும் வரும் வண்ணம் அமைத்த நமது கடை(vendor booth) ஏற்பாடுகளை மனமாரப் பாராட்டினர்.  பலரும் இதுவரை எந்த விழாவிலும் கண்டிராத  புதிய தமிழ் மக்கள் வட அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து பேரவை விழாவிற்கு முதன்முறையாக வந்ததைக் குறிப்பிட்டனர்.

நியூ யார்க் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பேரவை அமைக்கும் “தமிழ்க் குடில்” சிறப்பாக அமைய இந்த விழா பேருதவியாக அமையும் என்பது உறுதி.

செவ்வனே நிறைவடைந்த இவ்விழாவுக்கு உழைத்த தன்னார்வலர்களுக்கும், நிதியுதவி புரிந்த வள்ளல்களுக்கும், வணிகர்களுக்கும், எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு “சாக்ரமெண்டோ” நகரில் நிகழ இருக்கும் 36 வது பேரவை விழாவில் மீண்டும் சந்திப்போம்.

வாழ்க தமிழ்!!! 
அரங்கநாதன் உத்தமன்

 

Ranganathan Purushothaman
Coordinator - FeTNA 35th Annual Convention - New York
1-845-367-2436

Upcoming Events

பேரவைத் தமிழ்விழா

News from FeTNA and Member Sangams

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 34ஆம் ஆண்டுத் தமிழ் விழா!

Donate Now Click here to watch the show நிகழ்ச்சி நிரல் மாலை நிகழ்ச்சிகள் நாள்: நவம்பர் 19 – வெள்ளிக்கிழமை நேரம்: 7:30 PM Read More

திரு.தமிழன் பாக்கியராஜ் ஐயா மறைவுக்கு இரங்கல்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவருமான திரு.தமிழன் பாக்கியராஜ் ஐயா அவர்கள் இன்று காலைRead More

Upcoming Events