
- This event has passed.
புனைவெழுத்தின் சாத்தியங்கள்- எழுத்தாளர் பா.வெங்கடேசன்

வணக்கம்!
புனைவெழுத்தின் சாத்தியங்கள்
மொழி என்ற தொடர்பு சாதனம் உருவானபோதே புனைவு வாய்மொழியாக கதை சொல்வது என்ற செயலும் உருவாகி பின்னர் அவை எழுத்திலக்கியங்களாக வலுப்பெற்றிருக்க வேண்டும். மனிதக் கற்பனையை, மொழியைத் தாண்டி புனைவின் வழியே நீட்டிக்கத்தான் கவிதைகள், கதைகள் எல்லாம் செய்யப்படுகின்றன. புனைவின் வழியே ஒரு சமூகம் இன்னும் கண்டடையாததை இன்னொரு சமூகம் வழியாகக் கண்டடைவதை காலங்காலமாய் கதைகள், புனைவுகள் செய்து வருகின்றன. புராணங்கள், வாய்வழிக் கதைகளின் தேவையும் இதுதான், மொழியைத் தாண்டி புனைதல். மனித சமூகம் பல்வேறு நிலைகளைக் கடந்து படிப்படியாகப் பல வளர்ச்சிகளைப் பெற்று இன்றும் பெரும் நம்பிக்கையுடன் பூமியில் காலூன்றி நிற்பதற்கு கற்பனையும், கதை சொல்லும் முறையும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. மனித வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பது கற்பனைகளும், கதைகளும் தான்.
எழுத்து மரபில் பேசப்பட்ட கதைகளைவிட வாய்மொழி மரபில் பரவிய கதைகளே இன்றும் பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான கதைகள் உருவாகியிருக்கின்றன. பல கதைகள் தேச எல்லைகள் கடந்து உலகப் பொதுக் கதைகளாகவும் பேசப்படுகின்றன. தமிழ் மரபு, காவியங்களை, வாய்மொழிக்கதைகளை அடிப்படையாகக்கொண்டது. அயல் இலக்கியங்கள் புனைவுகளில் வெவ்வேறு பரிசோதனைகளை செய்யக் கூடியன. கதையின் போக்கு, கரு, உத்தி, மொழி, கதைசொல்லல் என ஒவ்வொன்றிலும் புது முயற்சிகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். கடந்த நூற்றாண்டில் தமிழிலும் புனைவில் மொழி, வடிவம், கதை சொல்லல் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. புனைவெழுத்தின் சாத்தியங்கள் என்ன என்பதை அதன் வீச்சின் நீள்வெளியில் எந்தப் புதிய தடங்களை நாம் கண்டடைகிறோம் என்பதும் ஒவ்வொரு படைப்பாளியின் கற்பனை மற்றும் புனைவின் எழுச்சியில் தீர்மானமாகிறது.
அந்த வகையில் புனைவெழுத்தில் அதன் வடிவத்தில், மொழியில் பல உத்திகளைகளைக் கையாண்டவர் எழுத்தாளர் பா.வெங்கடேசன். சமகால அரசியலையும், வரலாற்றையும் இணைத்து ஊடுபிரதித்தன்மையுடன் அவர் எழுதிய நாவல்கள் புகழ்பெற்றவை. பா.வெங்கடேசனின் ராஜன் மகள் என்னும் நீள்கதை அவருக்கு தமிழ் புனைவிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை அளித்தது. கதைப்பின்னலாகவும், மொழிப்பின்னலாகவும் எழுதப்பட்ட அவரது தாண்டவராயன் கதை மற்றும் பாகீரதியின் மதியம் என்ற இரு நாவல்களும் சிறந்த நாவல்களின் வரிசையில் வருவன என விமர்சகர்கள் கருதுகிறார்கள். வாரணாசி அவருடைய மூன்றாவது நாவல். வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991-இல் எழுதிய (Ghost in the Machine ) கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்கும் குறுநாவலை பொய்யுரு என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். புனைவிலக்கியத்தில் இவருடைய சீரிய பங்களிப்பிற்காக ‘ஸ்பாரோ’, ‘தமிழ்திரு’, ‘விளக்கு’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தமாதம் நடைபெற இருக்கும் இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் பா.வெங்கடேசன், புனைவெழுத்தின் சாத்தியங்களை வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்க வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.
புனைவெழுத்தின் சாத்தியங்கள் பற்றி அறிந்து கொள்ள இம்மாத இலக்கியக்கூட்டத்தில் இணைந்திருங்கள்.
நாள்: சனவரி 24, சனிக்கிழமை
அமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி
இந்திய நேரம்: இரவு 9.30 மணி
Zoom: https://fetna.org/ilakkiyam-online
YT Live: http://fetna.org/ytlive
FB Live: http://fetna.org/fblive
நன்றி.
