Loading Events

« All Events

சிறுகோட்டுப் பெரும்பழம்:சங்க இலக்கியத்தில் காதல் – கவிஞர் சக்தி ஜோதி

February 14

1000580461

உயிர் சிறிது; காதலோ பெரிது!! (குறுந்தொகை:18)

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார்அஃது அறிந்திசி னோரே, சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!
-கபிலர்.

காதல் என்பது வெறும் உணர்வோ செயலோ அல்ல, அது ஒரு நாகரிகத்தின் அடையாளம். எந்த சமூகம் காதலை கொண்டாடுகிறதோ, அந்த சமூகமே உயர்ந்த நாகரிகம் கொண்டதாக இருக்கும். மனித குலத்தின் ஆதி நிலங்களுள் ஒன்றென சொல்லப்படும் தமிழ் நிலமானது, உயிர்களின் அடிப்படை உணர்வான அன்பின் மீது கட்டமைக்கப்பட்ட சமூகமாகவே தோன்றி நிலைப்பெற்றுள்ளது. சங்ககால தமிழ் சமூகம் பொருள்முதல்வாத சமூகமாக இருந்தது. அதனால்தான் அவர்களால் காதலை உயர்வாக போற்ற முடிந்தது. களவும், கற்பும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளாக இருந்தன. தமிழர்கள் காதலை வெறும் உணர்வாக மட்டும் பார்க்கவில்லை. அதை மிக நுட்பமாக வகைப்படுத்தி, ஐந்திணைகளாக பிரித்தனர். சங்க இலக்கியங்களின் அகப்பாடல்கள் அன்பின் முதிர்ச்சிகளாகிய காதற் பாடல்களாகும். உலகக் காதலர் அனைவருக்கும் உரியவையாகும். இதுவரை கண்டெடுக்கப்பட்ட 2381 சங்கப் பாடல்களில், 1862 பாடல்கள் அகத்திணைப் பாடல்களாக உள்ளன. இது மொத்த பாடல்களில் 78% என்ற அளவிற்கு காதல் பாடல்கள் இருப்பதைக் காட்டுகிறது. இந்த புள்ளிவிவரமே சங்ககால தமிழர்கள் காதலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சங்ககால தமிழ்ச் சமூகம் காதலை ஒரு பண்பாட்டு அடையாளமாகக் கொண்டாடியது. குறுந்தொகையில் வரும் இந்த பாடல் அதை உணர்த்துகிறது:

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

காதலைக் கொண்டாடும் இம்மாதத்தில் “சிறுகோட்டுப் பெரும்பழம் – சங்க இலக்கியத்தில் காதல்” என்ற தலைப்பில் கவிஞர் சக்தி ஜோதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.

சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கவிஞர் சக்தி ஜோதி 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி, 2025 ஆம் ஆண்டில் “திருக்காட்சி” என்ற கவிதை நூல் வரை இதுவரை பதினைந்து கவிதைத் தொகுப்புகளையும், 2026 ஆம் ஆண்டில் “சங்க இலக்கியம்-உடல் மனம் மொழி என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார். பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும். சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம், சமூக ஊடகம் வரையிலான பார்வையுடன் இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன. தமிழ் இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

சங்க இலக்கிய காதல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இம்மாத இலக்கியக்கூட்டத்தில் இணைந்திருங்கள்.

நாள்: பிப்ரவரி 14, சனிக்கிழமை
அமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி
இந்திய நேரம்: இரவு 9.30 மணி
Zoom: https://fetna.org/ilakkiyam-online
YT Live: http://fetna.org/ytlive
FB Live: http://fetna.org/fblive

நன்றி.

Details

Organizer