
- This event has passed.
மாதாந்திர இலக்கியக் கூட்டம் (இணையவழி) – சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்

மனித வரலாறும், இருப்பும் தீராத கதைகளினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு சரித்திரம் கொண்ட தமிழ்ச் சிறுகதையின் வரலாறு மரமொன்று பெண்ணொருத்தியின் கதையைச் சொல்வதில் தொடங்கியது. சிறுகதையின் வடிவமும், பேசுபொருளும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகிறது. எதிர்பாராத முடிவை நோக்கிய நிலையிலியிலிருந்து, காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வை வாசகனின் கற்பனைக்கு விடும் புதிய வடிவங்களுக்குள் சிறுகதை தன்னைத் தானே மறுவடிவமைத்துக் கொள்ள, மீறல்கள் வழியே அதன் எல்லைகள் விரிந்தபடியே உள்ளன. தமிழைப் பொறுத்தவரை நவீனத்துவ எழுத்தின் முதன்மை முகமாக அறியப்படும் புதுமைப்பித்தனில் துவங்கி சிறுகதை இலக்கிய வடிவத்தில் கவனத்துடன் ஈடுபட்டு சமகாலத்தின் குரல்களாக விளங்குகிற இன்றைய இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் வரை தமிழ் சிறுகதைகளின் மரபு வலுவாகவே உள்ளது.
பேரவையின் இம்மாத இலக்கியக்கூட்டத்தில் “நவீன தமிழ்ச் சிறுகதைகள் – தனித்தன்மை மிக்க குரல்கள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு எம். கோபாலகிருஷ்ணன் அவர்களும் “தற்கால தமிழ்ச் சிறுகதைகள் – தொடக்கமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் திருமிகு லாவண்யா சுந்தரராஜன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
எம்.கோபாலகிருஷ்ணன் தமிழின் முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவர். சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் இயங்கி வருகிறார். நெசவாளர்குடிகளின் புலம்பெயர்தல் பற்றிய அவருடைய அம்மன்நெசவு தொன்மத்திலிருந்து சமகால வாழ்க்கை வரை நீடிக்கும் சிறந்ததொரு படைப்பு. திருப்பூர் தொழில்மயமாவதன் பின்னணியில் வெவ்வேறு இளைஞர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்கின்றன என்பதை விவரிக்கும் மணல்கடிகை தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது.
பிறிதொரு நதிக்கரை முதல் சக்தியோகம் வரை பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார். இவர் “கதா” தேசிய விருது, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, தஞ்சை பிரகாஷ் நாவல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
லாவண்யா சுந்தரராஜன் தமிழ் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். நீர்கோல வாழ்வை நச்சி கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமானார். குழந்தையின்மையை மையமாகக் கொண்ட காயாம்பூ நாவல் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. பெண்களின் அனுபவங்கள், நகர வாழ்க்கையின் உளவியல் நெருக்கடிகள், மற்றும் அடையாளப் பிரச்சினைகள் ஆகியவை அவரது படைப்புகளில் பிரதான இடம் பெறுகின்றன.
வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் அழைக்கிறோம்.
நாள்: அக்டோபர் 25, சனிக்கிழமை
அமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி
இந்திய நேரம்: இரவு 8.30 மணி
Zoom: https://fetna.org/ilakkiyam-online
YT Live: http://fetna.org/ytlive
FB Live: http://fetna.org/fblive
இலக்கியக்குழு,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
