இலக்கியக் குழு
Ilakkiya Kuzhu
3000 ஆண்டுக் காதல்!!
காதலர் தின சிறப்பு இலக்கியக் கூட்டம் 3000 ஆண்டுக் காதல்! என்ற தலைப்பில் பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், பாரீசு பல்கலைக்கழகம் அவர்களின் சிறப்பான தமிழ் உரையுடன் காதலர் தினத்தன்று அரங்கேறியது. நெஞ்சு நிறைய தமிழ் காதலுடனும் முந்தைய நாள் இரவு 8:30 மணி கிழக்கு நேரத்திற்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி அமெரிக்க கிழக்கு நேரம் காலை 1:00 மணி வரை நடந்தது. நள்ளிரவை தாண்டியும் இந்த நிகழ்ச்சியில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் கேள்விகளை கேட்டு தெளிவுற்றனர் என்றால் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே எத்தகைய ஒரு வரவேற்பை பெற்றது என்பதை உணரலாம் .
காதல், உலகம் முழுதும் உள்ளது தான்! அப்படியென்ன சங்கத் தமிழ்க் காதல் மட்டும் வேறுபட்டது? சங்கத் தமிழ் மொத்தமும் இயற்கை! காதலும் இயற்கை! இயற்கையோடு இயைந்த வாழ்வான தமிழ் வாழ்விலே, அக வாழ்வு / புற வாழ்வு – இரண்டிலுமே, காதல் என்னென்ன பங்காற்றியுள்ளது?
என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் வண்ணமும் கீழுள்ள 18 கேள்விகளை முன்னிறுத்தியும் பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் பேசினார்.
- கா+தல் என்றால் என்ன? கா+மம் என்றால் என்ன? காமம் ஒவ்வாச் சொல்லா?
- திருக்குறள் காமத்துப் பாலை, இன்பத்துப் பால் என்று மாற்றி அழைக்கலாமா?
- முதல் திணை, கைக்கிளையா? குறிஞ்சியா? முல்லையா?
- கைக்கிளை, உண்மையிலேயே ஒருதலைக் காதலா?
- பெருந்திணை, பொருந்தாக் காமமா? எனில் ’பெரும்’ என்ற அடைமொழி ஏன்?
- காதலர்களுக்குத் தமிழ் தந்த உரிமைகள் யாவை?
- முல்லை முதலா? குறிஞ்சி முதலா? பாலை என்பது காதல் தோல்வியா?
- LGBT காதல் (தற்பாலீர்ப்பு), தமிழில் உண்டா?
- காதல் வெற்றி / காதல் தோல்வி – இரண்டும் எப்படிக் கையாளப்பட்டன தமிழ் மரபில்?
- பெண், தன் காதலை முதலில் சொல்லலாமா? அல்லது ஆண் தான் சொல்ல வேண்டுமா?
- காதலர் சந்திக்க ஏற்ற நேரம் – இரவா? பகலா?
- காதலில் (அகத்திணை), சமூகம் (புறத்திணை) பற்றிப் பேசலாமா?
- தாய், தந்தை, தோழி, தோழன் – காதலில் இவர்களின் பங்கு என்ன?
- ஏறு தழுவுதல் கட்டாயமா? ஓடிப் போதல் (உடன்போக்கு) தமிழர் மரபா?
- பெற்றோர் இசைவு, காதலுக்குக் கட்டாயம் தேவையா?
- காதல் திருமணங்கள் மாறி, எப்போது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் தோன்றின?
- திருமணங்களில் சாதி முளைத்தது எங்கே? எப்போது? எவ்வாறு?
- காதல் கிழமையான சங்கத் தமிழ்க் காமவேள் விழா தான் Valentines Day என்பதா?:)
நிகழ்வின் காணொளியை மேலுள்ள வலையொளி இணைப்பில் காணலாம்.

தடை அதை உடை - மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் குழு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “தடை அதை உடை” என்ற கருப்பொருளில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
தடைகளை உடைப்போம்
வெற்றிவாகை சூடுவோம்
புத்தம் புதிய உலகு படைக்க
சிந்தனை சிறகு விரிப்போம்
பெண்ணடிமை களைவோம்
கொடுந்தளைகள் அறுத்தெறிவோம்
கவிதை நூல்கள் விடுத்து
வரலாற்றில் நம்பெயர் பொறிப்போம்
அடுக்களை ஆளும் கரத்தால்
அரசியல் சாசனம் வரைவோம்
கருமம் கண்ணென கொள்வோம்
கசடறகற்று உலகினை வெல்வோம்
திண்ணிய நெஞ்சுரம் கொள்வோம்
தீயவை தேய போராடி வெல்வோம்
உலகம் ஒரு நாள் ஏற்கும்
அரியாசனம் தந்தே ஏத்தும்
வெற்றித் திருமகள் வாசம்
உந்தன் முகவரி ஆகும்
அழுத்தம் தாங்கும் கரியும்
வைரமாய் உதயம் ஆகும்
சூரியன் கரிந்தணைந்தாலும்
கவித்தமிழா பொய்யாய் போகும்
பெண் முன்னேற்றத்தில் உள்ள சமூகத் தடை, மனத் தடைகளை உடைத்து வெற்றிப் பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக முத்தான மூன்று சாதனைப் பெண்கள் மருத்துவம், அரசியல், கலைத்துறை என்று அவரவர் துறைகளில் அவர்கள் எதிர்கொண்ட தடைகள், அதை அவர்கள் கையாண்ட விதம், அவர்கள் கற்ற பாடங்கள் என்று பல்வேறு விஷயங்களை பற்றிப் பேசினார்கள். அது மட்டுமல்லாமல், சுவையான பல கேள்விகளுக்குச் சிந்திக்கத் தூண்டும் பதில்களைத் தனிக்கவனச் சுற்றில் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
நிகழ்விற்கான முன்னோட்டக் காணொளியை இங்கே காணலாம்
நிகழ்வின் காணொளியை மேலுள்ள வலையொளி இணைப்பில் காணலாம்

அனல் வினா மன்றம் - பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி


நினைவுப் புகழஞ்சலி நிகழ்ச்சி - வாழ்வியல் வண்ணகம்
வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை சார்பில் தமிழ் மண் கண்ட மாபெரும் ஆளுமைகள் திரு. கி.ராஜநாராயணன், திரு. கோ. இளவழகனார் மற்றும் முனைவர் திரு.முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருக்கான நினைவுப் புகழஞ்சலி நிகழ்வினை இங்கே கொடுக்கப்பட்டுள்ள வலையொளி இணைப்பில் காணலாம் .

34-வது பேரவை விழா பட்டிமன்றம்
பேரவையின் 34-வது பேரவை விழா பட்டிமன்றம் “அடுத்த தலைமுறைக்கு பெரிதும் தேவை- தமிழுணர்வே, மொழியறிவே” என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிஞர் திரு ஜோ. அருள்பிரகாசம் அவர்கள் பட்டிமன்ற நடுவராக தலைமைத் தாங்கி சிறப்பித்தார். நிகழ்வின் காணொளி கீழே உள்ளது.


பேரவை விழா முன்னோட்ட நிகழ்ச்சி : தமிழ் இலக்கியத்தில் சமூக நீதிப் பயணம் - சங்ககால இலக்கியம், பக்தி இலக்கியம், புத்திலக்கியம்
ஜூலை 2021 3,4 தேதிகளில் நடந்த, 34-வது பேரவை விழா முன்னோட்ட நிகழ்வில் இலக்கியக் குழு வழங்கிய சிறப்புரையை இங்கே உள்ள காணொளியில் 57:30 மணித்துளியில் இருந்து காணலாம்.
பங்கேற்பாளர்கள்:
திருமதி பிரதீபா பிரேம்குமார் (சங்க இலக்கியம்)
திருமதி உமா ராம்குமார்(பக்தி இலக்கியம்)
திருமதி இரம்யா ரவீந்திரன்(புத்திலக்கியம்)
34வது பேரவை விழா- கவியரங்கம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை பெருமையுடன் வழங்கும் கவியரங்கம், பேரவை இலக்கிய குழுவின் சிறப்பான ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கவிஞர் திருமதி பிரதீபா பிரேம்குமார் அவர்கள் ஒருங்கிணைத்த இந்த கவியரங்க நிகழ்விற்கு, கவியரங்கத் தலைமையாக மாகாகவி தமிழன்பன் ஐயா வந்து சிறப்பு செய்தார். தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் என்ற பொருண்மையில் அமைந்த இந்தக் கவியரங்கத்தை கீழே உள்ள இணைப்பில் கண்டுகளியுங்கள்.

34வது பேரவை விழா- மரபுக்கலை - மரப்பாவைக் கூத்து
களரி தொல் கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் சார்பாக “கோவலன் கதை” என்ற மரப்பாவை கூத்து நிகழ்வு நடைபெற்றது. இதன் காணொளியை இங்கே காணலாம். இந்த நிகழ்வினை பேரவை இலக்கியக் குழு சிறப்பாக ஒருங்கிணைத்தது.
34வது பேரவை விழா- பறை இசை- சமர் கலைக்குழு
34-வது பேரவை விழாவில் சமர் கலைக் குழு வழங்கிய பறை இசையை இந்த காணொளியில் கண்டு மகிழுங்கள். பேரவை இலக்கியக் குழு இந்த நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தது.
34-வது பேரவை விழா-தமிழ் இனி
பேரவை விழாவில் பேராசிரியர் திரு. கண்ணபிரான் ரவிசங்கர் அவர்கள் வழங்கிய “தமிழ் இனி” என்ற தலைப்பில் அமைந்த உரை.
மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சி 2022
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப்
பெண்ணுருப் போந்து நிற்பது
தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு
நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!
என்ற கூற்றுப்படி பாரதி கண்ட கனவினை உண்மையாக்க உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களை இந்தச் சிறப்பு இலக்கியக் கூட்டத்தின் வழியாக சந்திக்கவிருக்கிறோம். பெண் என்னும் பெரும் சக்தியை ஆண்டுதோறும் பெண்கள் நாளன்று கொண்டாடுகிறோம்.
இவ்வாண்டும் பெண்களின் ஆற்றலை, அறிவை, மேன்மையை கொண்டாடும் வகையில் இந்த நாளினைச் சிறப்பிக்க மூன்று ஆற்றல் பொருந்திய சாதனைப் பெண்களை நம்மிடையே உரையாற்ற அழைத்திருக்கிறோம்.
“பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்று வள்ளுவர் பெருந்தகை பெண்மையைக் கொண்டாடுகிறார். மலைவாழ், சிற்றூர் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்வியல் சூழல் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்து “மனிதரில்” என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை வழங்க கவிஞர் திருமிகு வைகைச்செல்வி அவர்கள் வருகிறார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது இன்று எல்லா மனிதர்களையும் அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை. தமிழகத்தில் நிலவும் சுற்றுசூழல் குறித்த பார்வையைப் பகிர்ந்து கொள்ள நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சித் தலைவர் திருமிகு இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் அவர்கள் நம்முடன் இணையவுள்ளார். முன்களப் பணியாளராக அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தன்னுடைய எண்ணங்களை பகிரவும், பெண்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயமும் இயற்கை பாதுகாப்பிற்கு ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும் “மண்ணில்” என்ற தலைப்பில் நம்முடன் உரையாற்றவிருக்கிறார்.
பெண்கள் பலர் உயர்கல்வி பெற்று பல துறைகளில் சிறந்து விளங்கினாலும், விண்வெளித்துறை என்பது பல பெண்களுக்கு குறிப்பாக சிற்றூரிலுள்ள பெண்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்தத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள நாளைய தலைமுறையை தயார் செய்யும் விதமாக “விண்ணில்” என்ற தலைப்பில், தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் மேனாள் துணை இயக்குனர் திருமிகு ந.வளர்மதி அவர்கள் வருகை தரவிருக்கிறார்.
தமிழகத்தின் எடுத்துக்காட்டுப் பெண்களாக வலம் வந்து, சிறந்த களப்பணியாளர்களாக மிளிரும் இவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பேரவை இலக்கியக் குழு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.
வாருங்கள் எங்களோடு கலந்துகொண்டு வாழ்வை வென்றெடுத்த இந்தப் பெண்கள் கூறுவதை கேளுங்கள்!
நிகழ்ச்சி பற்றிய முன்னோட்டக் காணொளியை இங்கே காணலாம்



