இலக்கியக் குழு

Ilakkiya Kuzhu

முற்போக்கு இலக்கியம் இன்று

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் அக்டோபர் 2020 இலக்கியக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் , மணற்கேணி ஆய்விதழ் ஆசிரியருமான முனைவர் திரு. துரை.ரவிக்குமார் அவர்கள் முற்போக்கு இலக்கியம் இன்று என்ற தலைப்பில் பேசினார்கள்.

முனைவர் துரை.ரவிக்குமார் அவர்கள் நவீன இலக்கிய எழுத்தாளர் ஆவார். சென்ற நூற்றாண்டின் இறுதியில் நவீன முற்போக்கு இலக்கிய எழுச்சியை உருவாக்கிய நிறப்பிரிகை இதழில் முக்கிய பங்காற்றியவர். தலைசிறந்த எழுத்தாளரான இவர் வழக்கறிஞராகவும், தற்போதைய இந்திய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். தற்போது மணற்கேணி ஆய்விதழ் ஆசிரியராக உள்ளார். இவர் இயற்றிய இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடத்தக்க நூல்கள்: அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள், எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது, மிகைநாடும் கலை, சுவாமி சகஜாநந்தா-மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் இவருடைய கட்டுரைத் தொகுப்புகளில் சிலஎல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும், தமிழராய் உணரும் தருணம், பாப் மார்லி – இசைப் போராளி, கடல்கொள்ளும் தமிழ்நாடு, வன்முறை ஜனநாயகம் , கடக்க முடியாத நிழல் ஆகியன. 

இவருடைய உரையின் காணொளியை கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்.

கொடுமணல் அகழாய்வு காட்டும் தமிழர் பண்பாடு

“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்”
-பதிற்றுப் பத்து

ஈராயிரம் ஆண்டிற்கும் மேல் புவிப்பந்தின் மடிக்குள்ளே சுருண்டு கிடந்த நெல்மணிக் குவியல்களும், முன்னீர் கடந்து நானிலம் ஓடி வணிகம் செய்து கொணர்ந்த ஒளிரும் மணியும் கற்களும், செப்பிலே சிங்கச் சிலையும், இரும்பு உருக்கு உலையும், தாய் மொழியாம் தமிழி எழுத்துக் கொண்ட பானைகளும், நொய்யல் ஆற்றின் மடியிலே புரண்ட கொடுமணம் (கொடு மணல்) என்றோர் பேரூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழனின் எச்சங்கள்! அவன் பெரு வாழ்வு வாழ்ந்து முடித்து, விட்டு விட்டுப் போன பேரினத்தின் மிச்சங்கள்! தமிழினம் வாழ்ந்த நனி சிறந்த நல் வாழ்வின் சான்றுகள்!

உருண்டு கொண்டிருக்கும் புவிக்குள்ளே
உலாவிக் கொண்டிருந்ததோர் இனம்- அது
உறங்கிப்போய்க் காலம் பல
போன பின்
உறக்கம் தெளிவித்து
உண்மையை உலகிற்குணர்த்தியோர்
ஓராயிரம் பேர்! ஓராயிரத்தில்
உங்களோடு ஒருவர் இங்கே
உரையாட வந்துள்ளார்!
பொருந்தல், கொடுமணல்,
பாலாறு, வைகைக் கரை,
பொருநைக் கரை என
நீரோடும் வழியெல்லாம் முன்னோரின்
ஊரைத் தேடிய உலகளந்தவர்!
ஆழியிலே அமிழ்ந்து கிடக்கும்
அன்னைத் தமிழரின்
சுவடுகளைத் தேடித் திரியும்
அகல் விளக்கு!
ஊர் போற்ற வாழ்ந்த
தமிழ் மறக்குடி தாங்கிய
கொடுமணல் குறித்து
உலகிற்குணர்த்த உரம் கொண்டவர்
பேராசிரியர் கா.ராஜன்

அக்டோபர் 2020 மாத இலக்கிய கூட்டத்தில் தொன்மை நிறைந்த தமிழனின் மேன்மையை கொடு மணல் அகழாய்வு காட்டும் தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் பேசினார் பேராசிரியர் கா.ராஜன்.

Books by Prof. Dr. K. Rajan – Archaeological Scholar Department of History,
School of Social Sciences & International Studies, Pondicherry University

1 Ancient Irrigation Technology: Sluice Technology in Tamil Nadu
2 Archaeological Excavations at Porunthal
3 Archaeological Gazetteer of Tamil Nadu
4 Archaeology : Principles and Methods
5 Archaeology of Amarāvathi River Valley: Porunthal excavations
6 Archaeology of Palar Basin
7 Archaeology of Tamilnadu (Kongu Country)
8 Archaeology of the Palani Hills: A case study of Thandikudi
9 Early Writing System: A journey from Graffiti to Brāhmī
10 Jambai Tamil-Brahmi Inscription
11 Megalithic Builders of South India: Kodumanal (by Veena Mushrif/K Rajan)
12 Recent researches in the archaeology of Tamil Nadu
13 தொல்லியல் நோக்கில் சங்க காலம்
14 தொன்மைத் தமிழ் எழுத்தியல்: குறியீடுகளில் இருந்து தமிழ்ப் பிராமியை (தமிழி) நோக்கிய பயணம்
15 Traditional gemstone cutting technology of Kongu region in Tamil Nadu
இவருடைய உரையின் காணொளியை மேலுள்ள இணைப்பில் காணலாம்.

குளிரடிக்கும் சங்ககாலம்

நவம்பர் 2020 மாத இலக்கிய கூட்டத்தில் சங்க கால இலக்கியத்தில் உள்ள குளிர் கால வர்ணணைகளை பற்றி குளிரடிக்கும் சங்க காலம் என்ற தலைப்பில் பாவலர் அறிவுமதி அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வு 11/21/2020 அன்று சிறப்பாக நடந்தது.
சிப்பியில் தோன்றிய முத்தாக, மான் வயிற்றில் பிறந்த ஒள்ளரிதாரமாக தமிழ் அன்னையின் தவப் புதல்வனாய், வ.சுப.மாணிக்கம், தண்டபாணி தேசிகர், வெள்ளை வாரணனார், ம.பொ.சி ஆகியோர் அளித்த தமிழ் கொடையே பாவலர் அறிவுமதி அவர்கள். ஆங்கிலம் சிறிதும் கலவாமல் முற்றிலும் தமிழிலேயே இருநூறுக்கும் அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர். மழை பேச்சு, ஆயுளின் அந்திவரை, கூடிப் பேசுங்கள், நட்புக் காலம், முத்திரைக் கவிதைகள் போன்ற நூல்களை அளித்திருக்கிறார். ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் வித்தகர். விருதுகளை புறம் தள்ளிய விருதாச்சலத்துக்காரர், ஆயினும் நட்பை உயிராய்க் கொண்டதால் தன்னுடைய நண்பரின் பெயரை தன்னுடைய இயற்பெயர் மதியழகனில் இணைத்து, அறிவுமதி என்று மாற்றிக் கொண்டவர்.
வீரத்தைக் குண்டுகள் துளைக்காது!
வீரனைச் சரித்திரம் புதைக்காது!
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது!
இழந்த உயிர்களோ கணக்கில்லை!
இருமிச் சாவதில் சிறப்பில்லை!
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று!
என்ற நெருப்புச் வார்த்தைகளுக்கு
சொந்தக்காரர் என்றாலும்
காதல் வழி சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை
நாணக் குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை
என்று குளிர் சாரல் வரிகளையும் அவருடைய பேனா பேசும்.
தமிழ் பிறந்தநாள் பாடல் என்பது கவிஞர் அறிவுமதி எழுதி, அரோள் கரோலி இசையமைத்து, உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடி 2016 இல் வெளிவந்த ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். சிறுவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பரவலாகப் பாடப்படும் ஹாப்பி பர்த்டே டூ யூ எனப்படும் ஆங்கிலப் பாடலுக்கு இணையாக இந்தப் பாடலை அறிவுமதி எழுதி பரவலாக்கி உள்ளார்.இந்தப் பாடல் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2016 மாநாட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
பாவலர் அறிவுமதி அவர்களின் இனிய தமிழ் பேச்சைக் கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

தமிழரின் மெய்யியல் மரபு

நான் யார்? இந்த அண்டம் தோன்றியது எவ்வாறு? என்ற கேள்விகளுக்கான விடை தேடிய பயணம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதரிடையே நடக்கிறது. உலக நாகரீகங்களில் தொன்மையான நாகரீகமான தமிழர்கள் இது குறித்து 2000 ஆண்டுகளுக்கு மேலாக சிந்தித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற தமிழர் பண்பாடு கொடுத்த சுதந்திரத்தில் பல்வேறு மெய்யியல் கொள்கைகள் இங்குத் தோன்றி, பரவி வளர்ந்து உள்ளது.

தமிழனின் வேர்களுக்குள்
தமிழனைத் தேடிச் சென்ற
தமிழனிவன்!
கூறிய சொற்களெல்லாம்
சீரிய பல சொல்லம்புகளாய்
போகிற போக்கில் உள்ளமதில்
தமிழ்ப்பற்றை தைத்துவிட்டு செல்லும்!
மெய்யியலின் மேன்மை தெரிந்தவன்
காலத்தின் குரலுக்குரியவன்
காலம் தாண்டிய தமிழனின்
காலடியை நமக்கு காட்டிக் கொடுக்கும்
கரு ஆறுமுகத் தமிழன்!

இவர் விவேகானந்தா கல்லூரி மெய்யியல் துறை பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்!
2500 ஆண்டுகள் பழமையான தமிழரின் மெய்யியல் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்த பேராசிரியர் கரு.ஆறுமுகத் தமிழன் அவர்களின் உரை தமிழரின் மெய்யியல் மரபு என்ற தலைப்பில் 12/12/2020 அன்று நடந்தது.
இந்த அருமையான உரையின் காணொளியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

இசைத் தமிழ் வளர்த்த பாணர் வரலாறு

பாணர் பொருநர் விறலியர் கூத்தரென

பாருலவித் திரிந்தவரை -மீண்டும்

பார் பார்க்க செய்ய வைக்க

பேரவையும் முனைந்ததிங்கே!

யாழிசைத்து பண்ணமைத்து 

நாட்டியம் தன்னோடு கூத்தையும் 

கலந்தமைத்து 

இசைத்தமிழ் தனை வளர்த்த

பாணர் தம் வரலாற்றை

இலக்கியம் , தொல்லியல் சான்று வழி 

ஆற்றுப்படுத்த முனைந்தவர்

முனைவர்-சு.பழனியப்பன்.

திரு பழனியப்பன் அவர்கள், தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர். சென்னை ஐஐடி-யில் பி.டெக் முடித்த அவர் அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும், வார்ட்டனில் மேலாண்மை துறையில்  எம் பி ஏ பட்டமும் பெற்றவர். பென்சில்வேனியா பல்கலை கழகத்தில் உள்ள தென்னாசியவியல் நூலகத்தில் உள்ள நூல்களை எடுத்து படிக்க தொடங்கிய பின் தென்னாசிய வரலாற்றில் ஆர்வம் கொண்டு அத்துறையில் தன்னிச்சையாகவே ஆராய்ச்சியை தொடங்கி டல்லஸ் நகரில் South  Asia  Research And Information  Institute  (SARII )என்ற அமைப்பை தொடங்கினார். இந்திய கலாச்சார வரலாற்றை கல்வெட்டுகள்,  மொழியியல், இலக்கியம் என்று அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிறுவும் இவருடைய பணி மிகவும் சவாலானது, பலரும் செய்யத் தயங்கும் ஒன்று. அதிலும் பொறியியல் ஆராய்ச்சியாளராக முழுநேர பணியில் இருந்து கொண்டு தன் முனைப்பாலும், ஆழ்ந்த தமிழ்ப்  பற்றினாலும் மட்டுமே தொடர்ந்து இத்தகைய பணிகளை மேற்கொள்ள முடியும். பரதநாட்டியம் மற்றும் இந்திய நடனங்களின் வரலாறு, பக்தி இயக்கத்தின் தோற்றம்,  தீண்டாமையின் தோற்றம் குறித்த ஆராய்ச்சிகளை தற்போது மேற்கொண்டு வரும் இவருடைய  ஆய்வுக் கட்டுரைகள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  அரங்கேறியுள்ளது. “சங்க காலத்தில் பிறப்பின் அடிப்படையிலான சாதிகள் இருந்ததில்லை” என்பதை  நிறுவும் ஆய்வுக் கட்டுரை International Journal of Jaina Studies என்ற இதழில் வெளிவந்துள்ளது.

முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் வளர்த்த பாணர்களின் வரலாற்றை, திரு. சு.பழனியப்பன் அவர்கள் வட அமெரிக்க தமிழர்கள் அனைவரும் அறியும்படித்  தந்தார். நிகழ்ச்சியின் இணைப்பு மேலே.

மணிமேகலையும் தேரீகாதையும்

உலக இலக்கியங்களில் பெண்ணை காவியத்தலைவியாகக் கொண்ட முதன்மை இலக்கியங்களில் ஒன்று மணிமேகலை. புத்த மத பெண் துறவிகளால் பாலி மொழியில் புத்த மதம் மற்றும் துறவறம் குறித்து எழுதப்பட்ட பழமையான நூல் தேரீகாதை. இலக்கிய அழகில் பெருமை வாய்ந்த மணிமேகலை, அனைத்து இந்தியத் தத்துவங்களின் கருத்து செறிவையும் தன்னகத்தே கொண்டு இந்தியத் தத்துவ விளக்கங்களின்  கருவூலமாக உள்ள  அரிய நூல். துறவாடைக்குள் மறைந்த பெண்  மனத்தின் உணர்வுகளின்  ஓட்டம் இந்த முக்கியமான  இரு நூல்களிலும் எவ்வாறு உள்ளது என்பதை விளக்க நம்மிடையே உரை நிகழ்த்தியவர் பேராசிரியர் ர.விஜயலட்சுமி அவர்கள். இவர் இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றியவர். ஆக்ஸ்போர்டு பல்கலைகழத்தில் புகழ் மிக்க பேராசிரியர் தாமசு பறோ (Dr.Thomas Burrow) அவர்களின் மேற்பார்வையில்  சீவகசிந்தாமணி காப்பியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.  தமிழ் மொழி, வட மொழி, ஆங்கிலம், ஜெர்மனி, பிராகிருதம் மற்றும் பாலி மொழியில் புலமை உள்ளவர்.

இந்த நிகழ்வு 3/27/2021 சனிக்கிழமை, 8:30 PM கிழக்கு நேரம் “மணிமேகலையும் தேரீகாதையும்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் காணொளி இணைப்பு மேலே உள்ளது.

எழுத்தாளர் இமையத்தின் படைப்புலகம்

2021, மே மாத பேரவையின் இலக்கியக் கூட்டத்தில்  2020 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.இமையம் அவர்கள் உரையாற்றினார்கள். தமிழ் நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம் தனது படைப்புகளில் பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் முன் வைப்பவர். இவரது “செல்லாத பணம்” என்ற நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கபட்டது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி இவருடைய ”கோவேறு கழுதைகள்” நாவலைப் பற்றிக் கூறுகையில், தமிழ் எழுத்துலகில் கடந்த நூறு ஆண்டுகால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்த நிகழ்வின் இணைப்பை பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்.

தேவரடியார்கள் – கலையே வாழ்வாக!

எழுத்தாளர் வெண்ணிலா ஆசிரியர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, துணை இயக்குனர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர். கணிதப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர் உளவியல் மற்றும் வணிகவியலில் முதுநிலை பட்டங்களை பெற்றதோடு, கல்வியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா அவர்கள் அக்டோபர் 2021 இலக்கியக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ”தேவரடியார்கள் – கலையே வாழ்வாக!” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவருடைய உரையை இங்கே உள்ள இணைப்பில் காணலாம்.

மொழிப்போர் - நேற்று இன்று நாளை

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இலக்கியக் குழு சார்பாக நடைபெற்ற மொழிப்போர் ஈகியர் நினைவுக் கூட்டம். ஒரு இனத்தின் சிந்தனை, பண்பாடு, பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் என அனைத்தின் ஆணி வேராக இருப்பது தாய்மொழி. தாய்மொழியின் அழிவு ஒரு இனத்தின் அழிவாகும். ஆதிக்க சக்திகளின் மொழித் திணிப்பை எதிர்த்து தாய் மொழியைக் காக்க உலகெங்கும் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன. தாய்த் தமிழ் மொழியின் உரிமை காக்க நேற்று நடந்த போராட்டங்களின் வரலாற்றை அறிவதும், இன்று நடப்பவற்றை உணர்வதும், நாளை மற்றும் இன்று செய்ய வேண்டியதை திட்டமிடுவதும் மிகவும் முக்கியமானது. இது குறித்தான கூட்டத்தை பேரவையின் இலக்கியக்குழு மொழிப்போர் ஈகியர் நினைவைப் போற்றும் விதமாக ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வின் காணொளியை இங்கே பார்க்கலாம்.

படைப்பு அறத்தின் பயணம்

படைப்பு அறத்தின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார் மூத்த பத்திரிக்கையாளர்
கவிஞர் திரு.ஜெயபாஸ்கரன் அவர்கள். இந்த நிகழ்ச்சியை நீங்கள் இங்கே காணலாம்.