ஜல்லிக்கட்டு – பேரவையின் விருப்பமும் வேண்டுகோளும்
அன்புடையீர்,
வணக்கம்.
‘ஏறு தழுவுதல்’ என்றும் ‘சல்லிக்கட்டு’ என்றும் அழைக்கப்படுகிற இவ் விளையாட்டு , தமிழர்களின் வீரவிளையாடு! பண்டைய இலக்கியங்களில், தமிழர்களின் வீர விளையாட்டாக ‘ஏறுதழுவுதல்’ என்றுதான் இருக்கிறது. கலித்தொகை, திருவிளையாடல் புராணம், நாலடியார் போன்ற இலக்கியங்கள் அனைத்திலும் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில்தான் இவ் வீர விளையாட்டு தொடர்பான செய்திகள் காணக் கிடைப்பதாலேயே, இது எத்தகைய தொன்மை வாய்ந்த்து என்பதை நம்மால் உணர முடிகிறது. ஜல்லிக்கட்டு வழக்கிற்கானத் தீர்ப்பை, எதிர் வரும் நம் தமிழர் திருநாளாம், பொங்கல் நாளுக்கு முன்னரே அறிவிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் சென்ற வியாயன்று ( 05-01-2017 )அறிவித்தது. இதனால், தமிழகத்தில், நம் பண்டைய வீர விளையாட்டன ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலையெண்ணி வருந்துகிறோம்.
ஜல்லிக்கட்டுப் போட்டியும், அதனின் வழக்குப் போக்கும்;
கடந்த ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் திகதி அன்று, ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளைகளை பங்கு பெறச் செய்யலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
ஆனால், இவ்வறிப்பை எதிர்த்து, ‘இந்திய விலங்குகள் நல வாரியம், ‘பீட்டா’ என்ற விலங்குகள் நல அமைப்பு ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதி மன்றம், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையை இரத்து செய்தது. இதற்கிடையே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பரில் தள்ளுபடி செய்தது.
இதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் பங்கேற்க வகை செய்யும் மத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா பிராணிகள் நல அமைப்பு ஆகியவை தொடுத்த வழக்கின் வாதங்கள் கடந்த டிசம்பரில் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நம் உரிமை கோரி நம்மவர்களின் போராட்டம்;
தமிழகத்தில், இந்த ஆண்டு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உள்பட தமிழக அரசியல் கட்சியினர் பலர் தொடர்ந்து வலியுறுத்தினர். அம்மட்டோ! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும், இளங்குருத்துக்கள், மாணவக் கண்மணிகள், வேளாண் பெருமக்கள், உழைப்பாளிகள் ஆகியோர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக எம்.பி.க்கள் தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவேவைச் சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று புதன்கிழமை (11-01-2017) மனு அளித்தனர். எனினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வந்தால், ஜல்லிக்கட்டு போட்டியில் காளை பங்கேற்க வகை செய்யும் அனுமதியை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று தவே தெரிவித்துவிட்டார்.
ஜல்லிக்கட்டு வழக்கில், மறு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பை, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில், வழக்குரைஞர்கள் கோவிலன் பூங்குன்றன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தோன்றி, ‘பொங்கல் பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி ஏற்கெனவே ஜல்லிக்கட்டு வழக்கில் ஒத்திவைத்துள்ள தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும். இது தொடர்பான மனுவை அனுமதிக்க வேண்டும்’ என தம் வேண்டுகோளை விடுத்தனர். ஆனால், நீதியரசர்களோ, ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள சனிக்கிழமைக்கு (ஜனவரி 14) முன்பாக தீர்ப்பு வழங்குவது சாத்தியமில்லை எனவும் நீதிமன்றத் தீர்ப்பை விரைவாக வெளியிட நீதி மன்றத்தில் முறையிடல் சரியான முறையில்லை, இறுதித் தீர்ப்பு வரும் பொறுத்திருக்க வேண்டும் எனவும் கூறினர்.
பேரவையின் விருப்பம்;
அனைத்து ஊர்களிலும் வேளாண் பெருமக்கள், மாணவர்கள் இந்த விளையாட்டை இந்த ஆண்டு நடத்தியே தீரவேண்டும் என்று போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு இல்லையென்றால், ‘‘எங்களுக்கு கரும்பு பொங்கல் இல்லை, கருப்பு பொங்கல் என்கிறார்கள்’’. பல ஊர்களில் தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று சூளுரைத்துவிட்டனர்
மத்திய அரசாங்கமோ, உச்சநீதி மன்றத்தை மீறி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறது. பா.ஜ.க. மூத்த தலைவர் டெல்லி மேல்–சபை உறுப்பினரான இல.கணேசன் அருமையான யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு என்று நடத்தாமல் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் புதிய விழாவாக அறிவிக்கலாம். அதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது என்று ஒருகருத்தைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல்–அமைச்சரும் உறுதிமொழி அளித்துள்ளார்.
மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கவேண்டும். இல்லையென்றால், ‘ஏறுதழுவுதல்’ என்றபெயரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தமுடியுமா? என்பதைச் சட்டரீதியாக ஆராய்ந்து , எவ்வித விரும்பத் தகாத செயல்களும் நடக்காமல் தகுந்த முன்னேற்பாடுகள், மருத்துவவசதிகளுடன் இந்தப்போட்டியை நடத்த சட்டநிபுணர்களுடன், மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் ஆலோசனை நடத்தி உடனடியாக அறிவிக்கவேண்டும் என்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆவா.
செந்தாமரை பிரபாகர்
தலைவர்