தமிழ்ச்சங்கங்களுக்கு வேண்டுகோள்

பேரன்புடைய தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் வணக்கம்.

தமிழ் மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் சல்லிக்கட்டுத் தடை நீக்கத்திற்காக மாணவர்கள் மக்களோடு மக்களாக இணைந்து நடத்தும் அறப்போராட்டம் வெற்றியடைந்துள்ளதை நீங்கள் யாவரும் அறிந்திருப்பீர்கள். தமிழ்நாடு சட்டசபையில் சல்லிக்கட்டுத் தடைநீக்க ஆணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த, சல்லிக்கட்டுத் தடைநீக்கம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. இந்த மாநிலச்சட்டம் தொடர்ந்து சல்லிக்கட்டு நடத்த வழிவகுக்குமா? உச்சநீதிமன்றத்திலுள்ள சல்லிக்கட்டு வழக்குக்களின் நிலை என்ன? தேசீய கால்நடை நலவாரியத்தின் பி.சி.ஏ. (Prevention of Cruelty Act -PCA) சட்டத்தின் காட்டுவிலங்கு பட்டியலில் இருந்து காளைகள் நீக்கச் சட்டத்திருத்தம் வேண்டுமா? பீட்டா (People for Ethical Treatment of Animals-PETA) போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் எதிர்நிலைச் செயல்பாடுகள் என்னவாய் இருக்கும்? நடுவண் அரசின் மிருகநலச்சட்டங்கள், மாநில சட்டங்களைக் கட்டுப்படுத்துமா? போன்ற கேள்விகளுக்கு நமக்கு தெளிவான விடைகள் தெரியும்வரை, நாம் பொறுமை காப்பது அவசியம்.

சல்லிக்கட்டுத் தடை நீக்கத்திற்கான‌ தமிழ்நாட்டு மாணவர்களின் இளைஞர்களின், தாய்மார்களின், குழந்தைகளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக உங்கள் தமிழ்ச்சங்கங்கள் பல போராட்டங்கள் நடத்தியது அறிந்து பேரவைப் பெருமையடைகிறது. மேலும் பல தமிழ்ச்சங்கங்கள், சுற்றியிருக்கும் தமிழ்ச்சமூகத்துடன் இணைந்து ஆதரவு போராட்டங்கள் நடத்தியது நல்ல செயல்பாடு. தாய்த்தமிழ் உறவுகளுக்கு, மக்களுக்கு நாம் ஆதரவுகரம் நீட்ட வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

பேரவையும் சல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவாக, கடந்தவாரம் ஓர் ஆவணத்தை பேரவை இணையத்தளத்திலும், முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்ததை நீங்கள் அறிவீர்கள். மேலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வரும் போராட்டம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து விடாமல், அதன் நம்பகத்தன்மையையும் ஆராய்ந்து, பகிர்ந்து கொள்ளுமாறு தயவு கூர்ந்து வேண்டுகிறோம்.

இறுதியாக, கடந்த சில நாட்களாக சல்லிக்கட்டுத் தடைநீக்கப் போராட்டங்களுக்கு ஆதரவாக இங்கு நடத்தப்பட்ட பல போராட்டங்களில், நம் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்பில் இருப்பவர்களையும் தாண்டி, பல புதிய உணர்வாளர்கள் தன்னெழுச்சியாக கூட்டங்கள் நடத்தியதை நாம் கண்டோம் . இந்தச் சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் குடும்பமாகவும், குழுக்களாவும் கலந்துகொண்ட துடிப்புமிக்க இந்த இளைய தமிழ் சமூகத்தையும் ஒன்றிணைத்து, தங்களுடன் ஒரே குடும்பமாக செயல்பட வைக்க திட்டமிட வேண்டும் என்று தமிழ்ச்சங்கங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

வரும் காலங்களில் தமிழர்களுக்கான பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் போது தமிழ்ச்சங்கப்பேரவை, தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் கைகோர்த்து ஒன்றாக குரல் எழுப்பும் போது அதன் பலம் பன்மடங்கு பெருகும் என்பது உறுதி.

உங்கள் கருத்துக்களையும் பேரவையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றுவோம்! ஒன்று கூடி உயர்வோம்!!

அன்புடன்
செந்தாமரை பிரபாகர்,
தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை