வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

வணக்கம்

கடந்த சில நாட்களாக ஒரு சில சமூக ஊடகங்களில் ஓலைச்சுவடி பிரதி எடுப்பது தொடர்பாகப் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேரவையோடு தொடர்புப் படுத்தி வெளி வந்துள்ளன. அவற்றைப் பற்றிய பேரவையின் விளக்கத்தையும், பேரவையின் துணைத் தலைவர் திரு.கால்டுவெல் வேள் நம்பி அவர்களின் விளக்கத்தையும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(FeTNA) பேராளர்களுக்கும், வாழ்நாள் உறுப்பினர்களுக்கும் வணக்கம். பேரவை சாதி, மதம், இனம், பாலினம், அரசியல் சார்பு என எவ்வித வேறுபாடுகளும் இல்லாது பொதுமையோடு தமிழ்மொழியையும், தமிழர் நலனையும் முன்னிறுத்திச் செயல்பட்டுவரும் சிறந்த கட்டமைப்பினைக் கொண்டது என்பது தாங்கள் அனைவரும் அறிந்த உண்மை.

பேரவையின் செயற்குழுவிற்குத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் பேரவை தனது வாழ்த்துக்களை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. பேரவையில் நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் பல குழுக்களில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் . அதே நேரத்தில் பேரவைத் தேர்தலில் நின்று வெற்றி பெறச் சிறந்த அனுபவமும் பேரவையில் பல பொறுப்புகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய பங்கேற்பும் தமிழ், தமிழர் மற்றும் பேரவை நலனுக்காக உழைப்பை நல்கியும் இருக்க வேண்டும். அந்தவிதத்தில் பேரவையின் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு.கால்டுவெல் வேள்நம்பி 2002ல் பேரவைக்கு அறிமுகமானவர். டெக்சாஸ் மாநிலத்தில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவராக பணியாற்றியவர். கடந்த நான்கு ஆண்டுகளாகப் பேரவையின் செயற்குழுவில் இணைச் செயலாளராகவும் பின்னர் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருபவர். 2018 பேரவையின் தமிழ் விழாவை டல்லாஸ் மாநகரில் சிறப்பாக நடத்தி முடித்தவர். அவருக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பேரவை மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. வடஅமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பேராளர்கள், பேரவையின் வாழ்நாள் உறுப்பினர்கள் நேரடியாகவோ, செயற்குழுவினருக்கோ கேள்விகளை அனுப்பிக் கேட்பதும், விமர்சிப்பதும் ஆரோக்கியமான முறையாக இருந்து வருகிறது.

அண்மையில் தீர விசாரிக்காது பேரவை மீதும், அதில் பொறுப்பேற்றுப் பணியாற்றிவருபவர்கள் குறித்தும் ஆதாரமற்ற வதந்திகளையும், அவதூறுகளையும் சிலர் பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பி வருவது முறையான செயல் அல்ல.

பேரவை விழாவில் கலந்து கொண்ட பல்வேறுபட்ட ஆளுமைகள், சிறப்பு விருந்தினர்கள் போன்றோருள் ஒருவரே, தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர்.முனைவர் சுபாசினி. இந்த ஆண்டு தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் கால்டுவெல் வேள்நம்பியைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஓலைச்சுவடிச் செயல்பாடுகளோடு இணைத்துப் பேசி வருவதில் எந்தவிதத் முகாந்திரம் இல்லை என்பதே உண்மை. இதற்கான விளக்கத்தினைத் தமிழ் மரபு அறக்கட்டளை முகநூலில் தெளிவுபடுத்தியுள்ளது. மற்றும் சில நாட்களுக்கு முன்பு தமிழ்ப்பல்கழைக்கழகம், தஞ்சாவூர் இதன் சம்பந்தமாக தனி விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

இதுபோன்ற வதந்திகளையும், பொய்யுரைகளையும் பரப்பி பேரவையின் நன்மதிப்பைப் பாழ்படுத்திப் பேரவையின் செயல்பாடுகளை முடக்கிவிடும் முயற்சியைக் கண்டிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது பேரவையின் வேண்டுகோள். மேலும் பேரவையின் பெயரையும், இலச்சினையையும்(logo) அனுமதியின்றிப் பயன்படுத்துவதைப் பேரவையுடன் இணைந்து நாம் கண்டனத்தைத் தெரிவிப்பது நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.
இதையும் மீறி மீண்டும் பேரவைக்கும், பேரவைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் வீண்களங்கம் ஏற்படுத்த முயல்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் பேரவையின் நலன்களைப் பாதுகாக்கும் சூழல் காலத்தின் கட்டாயமாவதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

நன்றி !
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
(Federation of Tamil Sangams of North America – FeTNA)
———————————————————————————————————————-
Message from Thiru.Caldwell

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேராளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ள கால்டுவெல் வேள்நம்பியின் வணக்கம்.

கடந்த சில நாள்களாக தமிழ்மரபு அறக்கட்டளையின் ஓலைச்சுவடி குறித்த செய்திகளோடு என்னையும், என் மனைவி புஷ்பலதாவையும் இணைத்து ஆதாரமில்லாத செய்திகள் பல்வேறு ஊடகங்களிலும், பொதுவெளியிலும் சிலர் பரப்பிவருகின்றனர். அது முற்றிலும் உண்மையற்ற ஒன்று.

தமிழ்நாட்டில் நலிந்த நெசவாளர்களுக்கு உதவும் வகையிலும். நெசவுத் தொழிலை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் செயல்பட்டு வருகின்றது Traditional India நிறுவனம். அதன் பொருட்டு நெசவுத்தொழில் ஒருங்கிணைப்புக்கான பணியினை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லத் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து செய்ல்படுவதற்கு ஒத்துழைப்புத் தந்தது. புஷ்பாவுக்கும் தமிழ்மரபு அறக்கட்டளைக்குமான தொடர்பு நெசவுத்தொழில் ஒருங்கிணைப்பு மட்டுமே. தற்பொழுது அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். மேலும் ஆலோசனைக்குழு போன்ற எந்தப் பொறுப்பிலும் புஷ்பா இருந்தது இல்லை.

தமிழ்மரபு அறக்கட்டளையின் ஓலைச்சுவடிச் செயல்பாடுகளுடன் என் குடும்பத்தினை இணைத்து வெளிவந்த அவதூறான குற்றச்சாட்டுக்கள் எதுவும் உண்மையில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதுபோன்று வரும் வீண்வதந்திகளை நம்பிட வேண்டாம் என்றும், ஏதும் கேள்விகள் இருப்பின் எங்களை நேரடியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி
கால்டுவெல் வேள்நம்பி
புஷ்பலதா கால்டுவெல்