பேரவையின் தமிழிசை விழா – 2018

பேரவையின் ஆறாம் ஆண்டு தமிழிசை விழா சென்னை வடபழனியில் உள்ள  திரு. இராமசாமி நினைவுப் (SRM) பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 29 திசம்பர் 2018 இல் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

நம் பேரவை (FeTNA) கடந்த 31 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் “தமிழ் விழா” எனும் பெருவிழாவை ஒருங்கிணைப்பது போலவே தாய்த் தமிழ்நாட்டில் தமிழிசை வளர்ச்சிப் பணியை முன்னெடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும்  மார்கழித் திங்களில் ”தமிழிசை விழா” வை ஒருங்கிணைத்து வருகின்றது. இந்த ஆறாம் ஆண்டு தமிழிசை விழா தமிழர் பண்ணிசை, மரபுக் கலைகள், நாடக அரங்கேற்றம், துறைசார் சான்றோர்களின் உரைகளுடன் சென்னை  வடபழனியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா சென்னையில் உள்ள “இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையுடன்” இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது

பெரியசாமி தூரன், தேவாரம், திவ்ய பிரபந்தம், சீர்காழி முத்துத்தாண்டவர், திருப்புகழ் பாடல்களுடன் காலை 10 மணிக்கு விழா தொடங்கியது.

தொடர்ந்து குண்டூர் சுப்பையா மேல்நிலைப்பள்ளி, நெல்லை நாயகம் தொடக்கப்பள்ளி, வள்ளல் சபாபதி பதின்மேல்நிலைப்பள்ளி, லிங்க பைரவி – ஆர்த்தி இசைப்பள்ளி, சுவர சங்கமம் இசைப்பள்ளி, நன்மங்கலம் கானசுரபி இசைப்பள்ளி மாணவி மாணவர்கள் வழங்கிய தமிழ் சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை நான்கு மணி அளவில் தி.க.ச கலைவாணன் அவர்கள் குழுவினர் வழங்கிய தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரவையின் தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி வரவேற்புரை ஆற்றிட தொடந்து முனைவர் திரு. தா.இரா. பாரிவேந்தர், முனைவர் திரு. சி.சுப்ரமணியம், அமைச்சர் திரு. க. பாண்டியராசன், திரு. த. உதயச்சந்திரன், முனைவர் திரு. கோ. விசயராகவன், திரு. ப. பாலசுப்ரமணியன், திரு. சுடாலின் த. குணசேகரன், திரு. ஆழி செந்தில்நாதன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். ஐயா திருபுவனம் கு. ஆத்மநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.வேடந்தாங்கல் புத்தர் கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது.

பேரவை சார்பாக திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்களும், திரு. ஆண்டி கிரி அவர்களும் விழா ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.