தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்!

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்!
தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் இன்று (நவம்பர் 26, 2018) இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவிற்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர் அக்டோபர் 2, 1930- இல் மண்ணச்சநல்லூர் – திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர். தன் ஆர்வத்தால், தமிழ் மொழி மற்றும் கல்வெட்டு ஆய்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டு அத்துறையின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். 1987-1991 ஆண்டுகளில் இவர் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.
பல ஆண்டுகளாக, தமிழகவரலாற்றின் தெளிவில்லாத பகுதியாக இருந்தது சங்ககாலம்தான்;இலக்கியச் சான்றுகள் கிடைத்தன, ஆனால் சொல்லும்படியான தொல்லியல் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சங்ககால மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட கல்வெட்டுகள் எவையும் வாசிக்கப்படவில்லை. ஆகவே சங்ககாலம் என்பதே புலவர்கள் சிலரின் கற்பனை என்னும் கருத்து பொதுவாக இந்திய அறிவுலகில் நிலவியது. அறிஞர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரி 1961- இல், மகாதேவனிடம், தமிழகத்தின் சமணக்குகைகளில் பல கல்வெட்டுகள் உள்ளதாகவும், அவை தொன்மையான பிராமி எழுத்துக்களில் தமிழில் எழுதப்பட்டுள்ளதாகவும், அவை முறையாக வாசிக்கப்படவில்லை என்ற உண்மையை எடுத்துரைத்தார். ஏற்கனவே பிராமி லிபியில் ஐராவதம் மகாதேவனுக்கு அறிமுகம் இருந்ததால், புகளூர் குகையில் இருந்த கல்வெட்டை அவர் வாசித்து வெளியிட்டார். இந்த எழுத்துவடிவை தமிழ்பிராமி என அவர் அடையாளப்படுத்தியது
குறிப்பிடத்தக்கது.இதன் பிறகு, ஐராவதம் மகாதேவன் சங்ககாலத்தைச் சேர்ந்த முக்கியமான கல்வெட்டுகள் சிலவற்றை கண்டடைந்தார். எடுத்துக்காட்டாக, கேரளத்தில் எடக்கல் குகையில் உள்ள தமிழ்பிராமி கல்வெட்டைக் கூறலாம். பிழையாக வாசிக்கப்பட்ட கல்வெட்டுகள் பலவற்றை,
விரிவான மறுவாசிப்புக்கு உட்படுத்தினார். சங்ககால மன்னர்களின் பெயர்களை, அந்தக் கல்வெட்டுகளில் கண்டடைந்தார். தொல்லியல் சான்றுகளுடன் சங்ககாலத்தை இந்திய ஆய்வுப்புலத்தில் நிறுவியது ஒரு மாபெரும் சாதனை!
சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் பிராமியின் தொல்வடிவமான எழுத்துரு ஒன்றில், தமிழ் எழுதப்பட்டுள்ளது என்பதையும், அது சிந்துசமவெளி சித்திர எழுத்துக்களுடன் பொதுவான கூறுகள் கொண்டுள்ளது என்பதையும் விரிவான ஆய்வுத்தரவுகளுடன் உலகத் தொல்வரலாற்று
ஆய்வுக்களத்தில் நிறுவினார். அந்தத் தளத்தில் அவருடைய ஆய்வு நூல், Early Tamil Epigraphy :From the Earliest Times to the Sixth Century A.D ஒரு பெரிய செவ்வியல் ஆக்கமாகக்கருதப்படுகிறது.
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு 2001 Detroit பேரவைத் தமிழ்விழாவில் மாட்சிமை விருது வழங்கப்பட்டது;
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது.