தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சூழல் தீமைகளும்!

ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries) எனப்படுவது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் அமைந்துள்ள தொழிற்சாலை ஆகும். இங்கு செம்புக் கம்பி, தாமிரம், கந்தக அமிலம் பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, ஆலையை விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இதனிடையே, தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் தங்களிடம் உரிய காரணத்தை தெரிவிக்காமல், தங்கள் நிலத்தை ஸ்டெர்லைட் ஆலைக்காக கையகப்படுத்தியதாகவும் அப்பகுதிவாழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையானது நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் தாமிர ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றால், சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது மக்களின் பிரதான குற்றச்சாட்டாகும். அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல்,தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கருகிப்போதலும் ஏற்பட்டன.

மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் இம்மாதிரியான ஆலைகள் ஏற்படுத்தும் சுற்றுப்புற கேட்டால்  உயிர்வாழத் தகுதியற்ற நிலை ஏற்படுவதோடு  நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 20,000க்கு அதிகமானோர் இத்தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழ் மண்ணில் வாழும் மக்களையும் சுற்றுப்புறச் சூழலையும் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இந்த பிரச்சனைகளுக்கும் போராட்டங்களுக்கும்  நல்லதொரு   முடிவு பிறக்கும் என்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை உறுதியாக நம்புகிறது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சுழல் தீமைகளும் – PDF Document