தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!!

பேரன்புடையீர் வணக்கம்.

தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!!
   
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர உற்பத்தி ஆலையானது செயல்பட்டுவருகின்றது. இவ்வாலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாராப்பகுதிகளில் வாழும் மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
மக்களில் பெரும்பாலோருக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் கொடிய நோயான புற்று நோயால் பாதிப்புக்கு உள்ளாகி, சொல்லவொனாத் துன்பத்திற்கு ஆளானதைத் தொடர்ந்து; இனிவரும் சந்ததியினர் எவ்வித நோய் பாதிப்பும் இல்லாமல் வாழ இந்த கொடிய தனியார் ஆலையை அகற்றுவது ஒன்றே தீர்வு என ஊர் மக்கள் கூடி முடிவெடுத்து, அதற்கான அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.  இது தொடர்பாக பேரவையும் மார்ச் மதம் 30-ஆம் தேதி ஒரு வேண்டுகோளை விடுத்தது இங்கு நினைவு கூறத்தக்கது.
 
மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக 99-நாள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக 100-வது நாளான இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க இருந்தனர்.  அப்போது ஏற்பட்ட வன்முறையில், இதுவரை வந்த தகவலின்படி அப்பாவிகளின் 11 பேரின் உயிர் காவலர்களின் துப்பாக்கித் தோட்டாவிற்கு பலியாகியுள்ளனர் என்ற துயரச் செய்தி பேரவைக்கு தாங்க ஒனா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
ஒரு ஜனநாயக நாட்டில் அறப்போராட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமை. அவர்களைக் காக்க வேண்டியது அரசின் தலையாய கடமை.  இந்த உயர்ப்பலி நிச்சயம் தவிர்த்திருக்கக் கூடிய ஒன்று.  இந்த போராட்டத்தின் போது  உயிர் இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும், பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
நன்றி,
இரமாமணி செயபாலன்,
செயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.