தமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்!!!
தமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்!!!
டெக்சாசில் நடைபெற உள்ள பேரவையின் 31 ஆவது தமிழ் விழாவிற்கான ஏற்பாட்டு வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் விழாவில் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், அரசுத் துறை அதிகாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் என பல சிறப்பு விருந்தினர்கள் பேரவை விழா மேடையை அலங்கரிக்க உள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற பேரவையின் 28 ஆவது தமிழ் விழாவில் தொடங்கப்பட்ட ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியின் தொடக்க நிகழ்வு உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பங்களிப்போடும் தமிழ்நாடு அரசின் 10 கோடி ரூபாய் உதவியுடனும் 6 மில்லியன் இலக்கை அடைந்துவிட்டது. இந்த வெற்றியினை ‘தமிழ் இருக்கை குழுமம்’ பேரவை விழா மேடையில் சிறப்பு நிகழ்வாக கொண்டாட உள்ளது. அதற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் , தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் போன்றோரையும் அழைத்துள்ளனர்.
ஆர்வர்ட் தமிழ் இருக்கை நிதிக்கு இவர்களைப் போன்றோரின் சிறப்பான பங்களிப்பும் , உலகமெங்கும் வாழும் தமிழர்களின்பங்களிப்பும் ,தமிழராய் அரசியல் கடந்து,நாடு கடந்து தமிழின் சிறப்பு மேலோங்க நம் இனத்தின் ஒற்றுமையாய் பறை சாற்றுகிறது.
கடந்த 1988 இல் தொடங்கிய பேரவையின் தமிழ் விழா, தமிழ்நாட்டில் இருந்து நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், கலைக் குழுக்கள், நாடகக் கலைஞர்கள், தமிழிசை அறிஞர்கள், மரபுக் கலை வல்லுநர்கள் பலரை பேரவையின் தமிழ் விழாவிற்கு அழைத்து வந்து பெருமைப்படுத்தியுள்ளது. நலிந்த கலைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு அமெரிக்காவில் மேடை அமைத்துக் கொடுப்பதன் மூலம் தமிழர்களின் கலையை வளர்த்தெடுப்பதே பேரவையின் முதன்மை நோக்கம்.
உறுப்பினர்கள் சங்கங்களின் பேராதரவுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க மண்ணில் தமிழர்களின் கலைகளை, பண்பாட்டை போற்றி வளர்க்கும் இந்த அரும்பணியை தொடர்ந்து செய்து வருகின்றது. இப்பணிக்கு தமிழ்நாடு அரசின் கலை, பண்பாட்டு துறையின் ஆதரவை பெரும் முயற்சியை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகின்றது.
இம்முயற்சிக்கு இந்த ஆண்டு வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 23 ஏப்ரல் 2018 இல் சென்னையில் இருதரப்பும் இணைந்து தமிழ் வளர்ச்சிப் பணி ஆற்றிட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
இந்த ஒப்பந்தம் பேரவை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் உதவியுடன் இனி ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல மரபுக் கலைஞர்களை அமெரிக்கா அழைத்து வரவும், தமிழிசை நிகழ்வுகள் , தமிழ் ஆராய்ச்சி மாநாடு , தமிழ் பயிலும் மாணவர்களுக்கான சான்றிதழ் என்று தமிழ் வளர்ச்சிப் பணிகளில் புதிய வேகத்துடன் பேரவை பணியாற்றவும் வழி வகுக்கும்.
மேலும் பல சிறப்புகளை வழங்க உள்ள பிரம்மாண்ட தமிழ் விழாவாக டல்லாசு விழாவினை மெட்ரோபிளக்ஸ் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பேரவை முன்னெடுத்து வருகின்றது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் கல்வி நிலைகுறித்தும் அதன்மீதான பேரவையின் நிலைப்பாடு குறித்தும் தவறான கருத்துகள் பொது வெளியில் பரப்பப்பட்டு வருகின்றன.
அண்மைக் காலங்களில் தாய்த் தமிழ்நாட்டில் நம் மாணவச் செல்வங்களுக்கு கல்வி மறுக்கப்படும் நிகழ்வுகள் நம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையை பறிக்கும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்திர விலக்கு வேண்டும், கல்வி உரிமை என்பது மாநிலத்தின் ஆளுகையின் கீழ் வர வேண்டும் என்பதே பேரவையின் நிலைப்பாடு. அதன் வெளிப்பாடாகவே மாணவி அனிதாவின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்தி விலக்குக் கோரி அறிக்கையை வெளியிட்டு, அதை வலியுறுத்தி கூட்டத்தினையும் பேரவை கடந்த ஆண்டு ஒருங்கிணைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டும் டெக்சாசில் நடைபெற உள்ள பேரவையின் தமிழ் விழாவில் “உலகத் தமிழர் அரங்கில் ” ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி செயல்பட்டுவரும் செயற்பாட்டாளர்களையும் சிறப்பு விருந்தினராக பேரவை அழைத்துள்ளது. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள் பாதுகாக்க பேரவை தொடர்ந்து செயலாற்றும்.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து தமிழர் கலையை வளர்க்கவும் நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்கவும் பேரவை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும், தமிழர்கள் கலையை உலகிற்கு மேடையிட்டு காட்சிப்படுத்தும் பேரவையின் தமிழ் விழாவிற்கும் பேரவையின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கும் , உதவிகளுக்கும் பேரவை நன்றியை தெரிவித்து கொள்கிறது.
நன்றி,
பேரவை செயற்குழு சார்பாக .
திருமதி.செந்தாமரை பிரபாகர் ,தலைவர்