தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பண்டிகைக் கொண்டாட்டங்கள் உங்களுக்கு இவ்வாண்டு நிறைவோடு, சீரும் சிறப்புமாக அமைய வாழ்த்துகின்றோம்.

நேற்று (01/24/2018) புதன்கிழமை தாய்தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏற்பட்ட அவமரியாதை அறிந்து கவலை உற்றோம். இது ஒரு வருந்தத்தக்க செய்தியாகும்; தமிழ்ச்சங்கப் பேரவை தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத அவலச் செயலுக்கு விளக்கம் கேட்கவோ விவாதம் செய்வதோ நம் நோக்கமல்ல.

தாய்மொழி வாழ்த்துப் பாடல்களோ, தேசப் பண்களோ வெறும் வரிகள் அல்ல, ஒரு மக்கள் கூட்டத்தின் வரலாற்றையும், ஈகத்தையும் தாங்கி நிற்கும் அடையாளங்கள் அவை. ஒரு நாட்டிலோ, மாநிலத்திலோ வாழும் மக்கள் வேறுபாடுகளை மறந்து அந்நாட்டின் பண்களை மதித்திடும் மாண்பை வளர்த்துக் கொண்டவர்களாக இன்றைய நாகரிகச் சமூகம் வளர்ந்து நிற்கின்றது.

இயலாமை காரணமாக எழுந்து நின்று மரியாதை செலுத்த முடியாமல் போவது வேறு; ஆனால் வேண்டுமென்றே எழுந்து நிற்காமல் அவமரியாதைப் படுத்துவது அறிவார்ந்த சான்றோர்கள் ஏற்க இயலாச் செயலாகும்.

நம் தாய் நாட்டையும், தாய் மொழியையும் பாதுக்காப்பது நம் ஒவ்வொரின் கடமையாகும். இத்தகைய பொறுப்பு மிக்க ஒரு கடமையை இழிவு படுத்துவது, நம் அடுத்த தலைமுறைக்கு மிக மோசமான ஒரு முன் உதாரணத்தை உருவாக்கக் கூடும். தமிழர்கள் தங்கள் பண்பாட்டினையும், தாய்மொழியினையும் மீட்டுருவாக்கம் செய்திட புத்துணர்வுடன் தரணியெங்கும் கண்துஞ்சாது உழைத்துவரும் காலம் இது.

அறத்தால் கட்டியமைக்கப் பட்டுள்ள தமிழ்ச்சமூகம் இது போன்ற அவச்செயல்களை கடந்து செல்லும் என்ற அசையாத நம்பிக்கை தமிழ்ச்சங்கப் பேரவைக்கு உள்ளது.

நன்றி

செந்தாமரை பிரபாகர்
தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
பேரவைச் செயற்குழு சார்பில்