

தமிழுறவுகள் அனைவருக்கும் வணக்கம்:
நலம், நலமே விழைக!
கொரோனா (COVID-19) என்ற இந்த தீ நுண்தொற்றுக்கிருமி உலகத்தையே பாதித்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் இந்த கையறுநிலை போன்ற தருணத்தில்,நீங்களும் உங்கள் உறவுகளும் நண்பர்களும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நமது தாய்த்தமிழ் நாட்டில், அடிப்படைத் தேவைகளுக்குக்கூட வசதியற்ற நிலையில் இருக்கும் பலருக்கும், பலரும் பல வழிகளிலும் உதவிக்கொண்டிருப்பதை சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களின் வாயிலாக அன்றாடம் அறிகிறோம். தமிழகத்தில் உள்ள நமது தமிழுறவுகள் பலரிடமிருந்தும் அடிப்படை வாழ்வாதாரத்திற்குக்கூட வழியில்லாமல் நமது உதவிகள் வேண்டி வேண்டுகோள்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக இருளர் போன்ற பழங்குடி மக்கள், குடும்ப அட்டை இல்லாதவர்கள், அகதிகள்,முதியவர்கள், நாட்டுப்புறங்களில் வசிக்கும் மிக ஏழை எளிய தமிழ்மக்கள்,தமிழ் மரபுக் கலைஞர்கள், அரசு உதவி கிடைக்காதவர்கள் என்று பற்பல வகையினர் ஆவர். தமிழக அரசு இயன்ற அனைத்து உதவிகளையும் தமிழக மக்களுக்கு வழங்க முயன்றாலும், இந்த நேரத்தில் நமது பேரவையும் தன்னாலான உதவிகளை வழங்கி உதவிடக் கடமைப்பட்டுள்ளது. அதேபோல் வட அமெரிக்காவிலும் பற்பல தேவைகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்.
2020-ஆம் ஆண்டு தமிழ்விழாவைத் திட்டமிட்டபடி நடத்த இயலாத சூழலில், பேரவை விழாவிற்கு வழக்கமாக நன்கொடை வழங்குபவர்களும், பேரவையின் தன்னார்வலர்களும், மற்றவர்களும் முன்வந்து தங்களின் நிதியுதவிகளை அளிக்குமாறு பேரவையின் சார்பாக இருகரம் கூப்பி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது ( குறள் 102:- செய்ந்நன்றியறிதல்)
மனமுவந்த உதவிகளை வழங்கிட மேலதிக விவரங்கள் தமிழ்ச்சங்கப் பேரவையின்
இணையதளத்தில் உள்ளன. நன்கொடை அளித்திட கீழே சுட்டவும்.
© 2022 FeTNA. All rights reserved. Powered by CDS.