கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், தி.மு.க கட்சியின் தலைவராகவும், முத்தமிழ் அறிஞராகவும் விளங்கிய கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் இன்று தனது 95வது அகவையில் இயற்கை எய்தினார். தந்தை பெரியாரின் சீடராக, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தமிழ்நாடு அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர் கலைஞர். இந்திய மக்களாட்சி வரலாற்றிலேயே தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்து சாதனை படைத்தவர்.

அவரது ஆட்சியில் சமூக நீதி கொள்கைகள், சுயமரியாதை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive Growth) போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் , பல்வேறு நல வாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. அதன் விளைவாக அனைத்துத் தரப்பு மக்களும் நகர-கிராமம், சாதி,மதம், மொழி பாகுபாடின்றி முன்னேற வழி வகுத்தது. மனித வளர்ச்சி குறியீடு(Human Development Index),கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, விவசாயம், தொழிற் துறை வளர்ச்சி, கிராமப்புற உள்கட்டமைப்பு , மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), மனித வள மேம்பாட்டு குறியீடுகள் அனைத்திலும் முன்னனி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பதிற்கு அவரது ஆட்சியின் செயல்பாடுகள் முக்கிய இடத்தை வகிக்கிறது.இந்தியாவில் மாநிலங்களின் உரிமைக்கு 50 ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் கலைஞர்.தந்தை பெரியாரின் பெண்ணுரிமை, சமூகநீதி, சுயமரியாதை கோட்பாடுகளை சட்டமாக்கித் தந்தவர்.

தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்பைப் பெற்று தந்தவர். தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் பயன்பாட்டை நிலை நிறுத்த தேவைப்பட்ட பல்வேறு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் அவரது பங்கு குறிப்பிட தக்கது. அவர் ஒரு சிறந்த தமிழறிஞர் ஆவார். அவர் சங்கத்தமிழ், திருக்குறள் உரை, குறளோவியம் போன்ற பல்வேறு தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். பராசக்தி திரைப்பட வசனம் தமிழ் திரை உலகில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

அவரை இழந்து வாடும் உலக தமிழர்கள் அனைவருக்கும் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.