கஜா புயல் நிவாரண கோரிக்கை

பேரன்புடைய தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாட்டில் வீசிய “கஜா” புயல் ஏற்படுத்திய சேதங்களை நீங்கள் செய்திகள் வழியாக அறிந்திருப்பீர்கள். இயற்கை எப்போது தன்னுடைய கைகளை அகலவிரித்து விரல்களால் தழுவிக் கொள்ளும் என்றோ, கோர நகங்களால் கீறி காயப் படுத்தும் என்றோ, யாரும் அறுதியிட்டு சொல்ல முடியாது. நமது ஆற்றலுக்கு, அறிவுக்கு அப்பாற்பட்டது இயற்கை. பலநேரங்களில் தென்றலாக வருகிற காற்றே புயலாக புறப்படும்போது ஏராளமான சேதங்களை ஏற்படுத்திவிடுகிறது.நாகை மாவட்டம் முழுவதையுமே புரட்டிப் போட்டுவிட்டது. திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் பல மாவட்டங்களில் அதன் கொடிய விளையாட்டை விளையாடி இருக்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தியது தமிழக அரசு.இனிவரும் நாட்களில் சேதங்களை மதிப்பிடுவதிலும், சீர்செய்வதிலும், நிவாரணம் அளிப்பதிலும் போர்க் கால அடிப்படையில் வேகம் காட்ட வேண்டும். மின்கம்பங்களை மாற்றி அமைத்து, மின்சார வசதி மற்றும் தொலைத்தொடர்பு வசதி செய்து கொடுக்க வேண்டும். இதுபோல, சேதங்களை மிகவேக மாக மதிப்பிட்டு, ஓரிரு நாட்களில் சேதவிவரம் மற்றும் தேவையான நிதிஉதவி குறித்து அறிக்கையை மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி, அங்கிருந்து மத்தியகுழு இந்த சேத நிலைமைகளை நேரடியாக பார்வையிட உடனடியாக வரவழைக்க வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் தாயகத்தில் வாடும் நம் உறவுகளுக்கு நாம் உதவுவது நமது கடமை. எனவே தமிழ்ச்சங்கங்கங்கள் தங்கள்

உறுப்பினர்களுடன் கலந்தலோசித்து முடிந்தளவு உதவிட வேண்டுகிறோம்.

உங்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள நண்பர்கள் வழியாகவோ, அமைப்புகள் வழியாகவோ உதவலாம். முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் அனுப்பலாம்.