எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்

தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்தவராகத் திகழ்ந்த, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமையன்று தனது 73 ஆவது அகவையில் காலமானார். அன்னாருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக!
கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப் பட்டனம் பகுதியைச் சேர்ந்த தோப்பில் முகமது மீரான், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சு வண்ணம் தெரு என ஐந்து நாவல்களையும் அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த சயனம் காலணி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். வைக்கும் முகமது பஷீரின் சுயசரிதை உட்பட மலையாளத்தில் இருந்து ஐந்து படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மீனவ கிராமங்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு கடலோரக் கிராமத்தின் கதை நூல் இன்றளவு பல இலக்கியவாதிகள் அதிகம் போற்றக்கூடிய படைப்பாகும்.
இவரது சாய்வு நாற்காலி நாவலுக்கு 1977ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கிய சிந்தனை விருது, லில்லி தேவசிகாமணி விருது, தமிழக அரசு விருது, அமுதன் அடிகள் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது எனப் பல விருதுகள் பெற்ற பெருமகன்.
இஸ்லாமியப் பண்பாட்டை அதன் உண்மையான வடிவத்தில் நவீன தமிழ் இலக்கியத்தில் பதிவானது மிகக் குறைவு. அந்தப் பண்பாட்டைப் பொதுவெளிக்குச் சிறப்பாக முன்வைத்தவர் தோப்பில். இஸ்லாம் குறித்து எழுதுவதிலிருந்த மனத் தடையை அவர்தான் முதன் முதலில் உடைத்தார் எனலாம். இஸ்லாம் சார்ந்த வாழ்வை அவர் தன் எழுத்தில் விமர்சனப் பூர்வமாக அணுகி, மதத்தில் உள்ள அடிப்படைவாதத்தையும், மதத்தின் பேரால் மக்களை ஒடுக்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இஸ்லாமிய வாழ்வை பற்றி எழுதும்போது ஒன்று புனிதப் படுத்துகிறார்கள் அல்லது அவதூறு செய்கிறார்கள். இரண்டையும் செய்யாமல், உண்மைகளை அப்படியே எழுதியவர் தோப்பில்.
தோப்பில் முகமது மீரான் மறைவால் வருந்தும் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் மற்றும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழலால்
பொன்றாது நிற்பதொன் றில்“.
என்ற திருக்குறளுக்கு இணங்க, அன்னாரின் புகழ் உலகத்தில் என்றென்றும் நின்று நிலவும்.
– வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை